காலத்தின் கோலம் - 1980

Weekly article by Mythili Chandrasekaran - Sketch courtesy Mrs. Nithya Balaji

காலத்தின் கோலம் - 1980

மைதிலி சந்திரசேகரன்
 
வீடே ஓரே பரபரப்பாக இருந்தது.

கல்யாணியைப் பெண் பார்க்க வருகிறார்கள்.

சிவராமன், மீனாட்சி தம்பதியரின் மூன்று குழந்தைகளில் மூத்தவள் கல்யாணி. அடுத்தவள் ஹேமா. கடைக்குட்டி ஶ்ரீராம்.

எல்ஐஸியில் ஆபீஸராக வேலை பார்க்கும் சிவராமன், தன் மூத்த மகள் கல்யாணத்தை
விமரிசையாகச் செய்ய ஆசைப்பட்டார்.

மகாலிங்கபுரம் கோயிலில் இருந்து வரன்கள் சார்ட் வாங்கி வந்து, பொருத்தமான ஒரு சில வரன்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வீட்டிற்கு ஜாதகம் கேட்டு எழுதி, இரு வீட்டாரும் பொருத்தம் பார்த்து பதில் வந்ததில், ஒரு வரனுக்குக் கடைசியாக இப்போது பெண் பார்க்கும் படலம்.

சுடச்சுட பஜ்ஜியும், முந்திரியும், திராட்சையும் மிதக்க நெய் மணக்கும் கேசரியும் தயார் நிலையில் இருந்தன. காபிக்குப் பில்டரில் டிகாக்‌ஷனும் ரெடி.

அழகாகப் பட்டுப்புடவையும், தலையில் இரட்டை சரமாக மல்லிகைப் பூவும், கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி, நெக்லேஸும்  அணிந்து இருபத்தியோரு வயது பி.ஏ. பட்டதாரியான கல்யாணி, அழகுப் பதுமையாக அமர்ந்து கொண்டிருந்தாள்.

சிவராமன் நொடிக்கொருமுறை வாசலைப் பார்ப்பதும் கடிகாரத்தைப் பார்ப்பதுமாகப் பிள்ளை வீட்டாருக்காகக் காத்துக் கொண்டிருந்தார் .

இதோ டாக்ஸி வந்து விட்டது.

பிள்ளை ஶ்ரீதரன், அவனுடைய அம்மா, அப்பா, மாமா, மாமி, சித்தி, சித்தப்பா சகிதம் ஆஜரானான்.

சிவராமன், மீனாட்சி இருவரும் வாசலில் வந்து அவர்களை வரவேற்றனர். (அக்கம்பக்கம் வீடுகளிலிருந்து சில தலைகள் எட்டிப் பார்த்தன).

வந்தவர்கள் உள்ளே வந்து அமர்ந்ததும் ஸொஜ்ஜி, பஜ்ஜி, காபி படலம் முடிந்த பின், கல்யாணி அழைக்கப்பட்டாள்.

வந்து அனைவருக்கும் நமஸ்காரம் செய்து, வந்திருந்த பெண்மணிகளுடன் பாயில் அமர்ந்து கொண்டு, மாப்பிள்ளை வீட்டார் விருப்பத்திற்கேற்ப, "மகாலக்ஷ்மி ஜகன்மாதா" என்ற சங்கராபரணக் கீர்த்தனையைப் பாட, அனைவர் முகத்திலும் ஒரு திருப்தி தெரிந்தது.

"அந்தக்காலம் போல, போய் லெட்டர் போடறோம்னு நாங்க சொல்ல விரும்பல. பையன் பிடிச்சிருக்குனு சொல்லறான். மேற்க்கொண்டு பேச நாள் பார்த்துண்டு வாங்கோ", என்று பிள்ளை வீட்டார் சொல்லிக் கிளம்ப, சந்தோஷத்தில் கண்களில் நீர் கோர்க்க, மீனாட்சி பெண்ணை அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள்.

அடுத்த நாளே சிவராமன், மீனாட்சி இருவரும் சிவராமனின் தந்தை, மீனாட்சியின் சகோதரன், அவர் மனைவியோடு, கல்யாணப் பேச்சு வார்த்தைக்காக, மாப்பிள்ளை அகத்திற்குப் புறப்பட்டனர்.

"பெண்ணுக்கு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?"

"25 சவரன் நகை, வைரத்தோடு, பூஜைக்குத் தேவையான வெள்ளிப் பாத்திரங்கள், தட்டு, மாப்பிள்ளைக்குச் செயின், மோதிரம், மற்றபடி குடும்பம் நடத்தத் தேவையான சாமான்கள் இதெல்லாம் செய்யறோம்", என்றார் சிவராமன்.

"30 சவரனாப் போட்டுடுங்கோ. அப்புறம் வரதட்சணையாக ஏழாயிரம், மாப்பிள்ளைக்கு ட்ரெஸ், தலை தீபாவளிக்கு வைர மோதிரமும், கைக் கடியாரமும் பண்ணிடுங்கோ".

மீனாட்சி கவலையோடு சிவராமனைப் பார்க்க, சிவராமன் தயங்காமல், மாப்பிள்ளை வீட்டாரிடம் "சரி" என்று சொன்னார்.

சம்பந்தி மரியாதைக்கு எங்காத்து மாமிக்கு நல்ல கெட்டிக் கரை போட்ட பட்டுப் புடவை, தாலி முடிய என் ஓரே பெண் ரமாவுக்கும் அதே போல் பட்டுப் புடவை எடுத்துடுங்கோ".

சிவராமன் சரி என்று தலையாட்டினார்.

எங்களுக்கு சொந்தக்காரர்கள் அதிகம். அதனால் மண்டபம் கொஞ்சம் பெரிதாய் இருக்கட்டும். சாப்பாடும் நன்னா இருக்கணும். வயதான பெரியவர்கள் பத்து பேருக்கு மடி சமையல் ஏற்பாடு பண்ணிடுங்கோ".

"சரி".

"மற்றபடி வருஷாந்திர சீர் எல்லாம் நீங்களே செஞ்சிடுவேள். உங்க அகத்திலயும் முதல் கல்யாணமாச்சே!".

"அப்படியே செய்யறோம். நிச்சயதார்த்தத்திற்கும், முகூர்த்தத்திற்கும் எங்கள் ஜோஸியரிடம் கேட்டு, நாட்கள் குறித்துக்கொண்டு வரேன். உங்க சௌகரியத்திற்கு நாள் நிச்சயம் பண்ணிடலாம்".

எங்கே பெண்ணுக்கு வைர நெக்லேஸ், பையனுக்கு ஸ்கூட்டர் என்று ஆரம்பிக்காமல், இந்த மட்டில் முடிந்ததே என்று, சிவராமனுக்குச் சந்தோஷம்.

கல்யாணி அதிர்ஷ்டக்காரி தான். மாப்பிள்ளை எம்.ஏ. படித்திருக்கிறான். பேங்க் ஆபீஸர். கை நிறைய சம்பாதிக்கிறான். ஓரே அக்கா. அவளுக்கும் கல்யாணமாகி விட்டது. பெரிய பொறுப்பென்று ஒன்றும் பையனுக்கு இல்லை.

அடுத்து வந்த பத்து நாட்களில் நிச்சயதார்த்தம் முடித்து, மூன்றாவது மாதம், ஒரு தைத்திங்களில் ஶ்ரீதரன், கல்யாணி விவாகம் எந்த விதமான சச்சரவும் இல்லாமல், விமரிசையாக, சுபமாக நடந்தேறியது.

கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பெண் இனி இன்னொருவர் வீட்டுக்குச் சொந்தம் என்று நினைத்த போது மனசு கனத்துப்போக, கண் கலங்கி, அவள் சந்தோஷமாக வாழப்போகும் மணவாழ்வை நினைத்து ஆனந்தக்கண்ணீருடன், சிவராமன், மீனாட்சி தம்பதியர், கல்யாணியைப் புகுந்த வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பினர்.


                                                                           தொடரும்

Comments

Record not found!

Post Comments